மருத்துவம் அறிவோம்
रोगों के बारे में पता - ईगरै शिवकुमार सुब्बुरमण - நோய்களை பற்றி அறிந்து கொள்வோம் - ஈகரை சிவகுமார் சுப்புராமன்விழி வெண்படல புண் - Corneal Ulcer
- Posted: 3:43 AM
- |
- Author: சிவகுமார் சுப்புராமன்
- |
- Filed under: விழி வெண்படல புண் - Corneal Ulcer
நாம் வெளி உலகைக் காண உதவும் ஜன்னலே நமது கண்ணின் விழிவெண்படலம் தான். இதன் மேற்பரப்பில் வெண்மையான புள்ளி தோன்றுவதைத்தான், Corneal Ulcer என்று அழைக்கின்றனர். இதனால் விழிவெண்படலம் சிவந்து விடும். வீக்கம் காரணமாக ஏற்படும் திசு இழப்பால் புண் ஏற்படுகிறது. விழிவெண்படல மையத்தில் புண் தோன்றினால் அது பார்வையைப் பாதிக்கும், இந்தியாவில் ஆண்டொன்றிற்கு 25,000 பேர் கார்னியல் அல்சரால் பாதிக்கப்படுவதாக கண் பாதுகாப்பிற்கான தேசிய சங்கம் தெரிவிக்கிறது.
Corneal Ulcer ஏற்படக் காரணம் என்ன?
விழிவெண்படலத்தில் தோன்றும் கீறல் வழியாக பாக்டீரியாக்கள் அங்கு நுழைகின்றன. சில சமயங்களில் கண் இமைகளை சரியான நேரத்தில் மூட இயலாமல் போவதாலும் புண் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சில சமயங்களில் அமிலம் கண்களில் பட்டால் ரசாயனத் தீப்புண் விழி வெண்படத்தில் ஏற்படுகிறது. இதன் காரணமாக நோய்க் கிருமிகள் நுழைந்து விழிவெண்படலத்தில் உள்ள சவ்வினை பாதிப்படையச் செய்கிறது.
காண்டாக்ட் லென்சுகள் அணிவதாலும், விழி வெண்படலத்தில் புண் ஏற்படுவது மிகவும் சகஜமாகி வருகிறது. சில சமயங்களில் கண்ணீர் வற்றிவிடுவதால் கண்ணீரில் உள்ள நோய்க்கிருமிகளை எதிர்க்கும் சக்திகளை நாம் இழந்து விடுகிறோம். இதுவும் Corneal Ulcer தோன்ற காரணமாகிறது.
இமைகளில் ஏற்படும் நோய்களால் கண்களை முழுவதும் மூட இயலாமல் போய்விடும்போது அதாவது, பெல் பால்சி என்ற நரம்புத் தளர்ச்சி ஏற்படும்போது, கண்களை முழுவதும் மூட இயலாமல் போகும் வாய்ப்புகள் இருக்கிறது.
அது விழிவெண்படலத்தை வற்றச் செய்வதால் புண்கள் தோன்றுகிறது. மேலும் பால்வினை நோய் காரணமாகவும் விழி வெண்படல புண் தோன்றலாம். ஹெர்பஸ் போன்ற வைரஸ் கிருமி தாக்குதலினால் ஆறாத விழி வெண்படல புண் ஏற்படும் வாய்ப்புண்டு.
அறிகுறிகள் :
* கடுமையான வலி.
* சூரிய வெளிச்சத்தில் கண்கள் கூசுதல்.
* கண்ணீர் அதிகம் வெளியேறுதல்.
* சீழ் வடிதல்.
* விழி வெண்படலத்தில் வெள்ளைப்புள்ளி, இது சாதாரணமாக பார்க்கும்போது தெரியாது.
* கண்கள் சிவத்தல்.
* இமைகள் வீக்கம்.
* பார்வை மந்தம்.
* வெளியிலிருந்து வரும் பாதிப்புகள்.
நோய்க்கணித்தல் :
மருத்துவர்கள் சிறிய நுண்ணோக்கி மூலமாக புண்ணை கண்டறிவார்கள். அல்லது ஃப்ளூரசன்ட் கண்சொட்டு மருந்தை விட்டு புண் இருப்பதை தெளிவாகக் காண்பார்கள். புண் ஏற்பட நோய்க்கிருமி காரணமாக இருந்தால் புண் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி பயாப்சி செய்யச்சொல்வார்கள். வீக்கம் போன்றவற்றிற்கு ரத்த பரிசோதனையும் செய்வார்கள்.
சிகிச்சை :
விழிவெண்படல புண் மற்றும் கிருமிகளுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டும். ஏனெனில் தாமதம் காட்டினால், விழி வெண்படல காயத்தை மேலும் மோசமாக்க வாய்ப்புகள் இருக்கிறது. பாக்டீரியாவால் தோன்றும் புண்களுக்கு தீவிர சிகிச்சை தேவை. சில பேருக்கு 15 நிமிடத்திற்கு ஒரு முறை பாக்டீரியா எதிர்ப்பு கண் சொட்டு மருந்து விடப்படும். புண் மோசமாக இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் கூறலாம். வலி இருந்தால் வலி நிவாரணிகளை பயன்படுத்துவார்கள். வலிக்கு சிறப்பு சொட்டு மருந்துகளை விட்டு கண் பாப்பாவை விரிவடையச் செய்வார்கள். அனைத்திற்கும் மேலாக விழிவெண்படலம் கடுமையாகச் சேதம் அடைந்திருந்தால், விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சையும் பரிந்துரை செய்யப்படுகிறது.
தடுப்பது எப்படி?
கண் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. தூசிகளிலிருந்து, தற்காத்துக் கொள்ள ஏதேனும் கண்ணடி அணிந்து கொள்ளலாம். கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பவராக இருந்தால் அதைச் சுத்தம் செய்வதில் அதிக அக்கறை செலுத்துங்கள். லென்சுகளை கைகளால் எடுக்கும் முன் கைகளை நன்றாக கழுவுங்கள். லென்சை சுத்தம் செய்ய எச்சிலை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் எச்சிலிலுள்ள பாக்டீரியா விழி வெண்படலத்தை பாதிக்கலாம். ஒவ்வொரு நாள் மாலையும் லென்சை நன்றாகச் சுத்தம் செய்யும் பழக்கம் அவசியம். கான்டாக்ட் லென்சுடன் இரவு படுக்கச் செல்ல வேண்டாம். லென்சுகளை கிருமித் தடுப்பு திரவத்தில் வைக்கவும்.
விழிவெண்படல புண்ணிற்கு சிகிச்சை அளிக்காமல் இருந்தால், புண்ணும், கிருமிகளும் நிரந்தர சேதத்தை உருவாக்கிவிடும். மேலும் கண்ணின் உள்பகுதியில் துளை கூட ஏற்படலாம். இதனால் பார்வை நிரந்தரமாகப் பாதிப்படையும் வாய்ப்புகள் உண்டு.
வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக விழி வெண்படல வீக்கம், உணர்வுக் குறைபாடு காரணமாக ஆரோக்கியமற்ற விழிவெண்படலம் இதனால் புண் ஏற்படலாம்.
விழிவெண்படல புண் காரணமாக துளை ஏற்பட்டால் லென்ஸ், புண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கும், இதனால் லென்சின் தெளிவில் இழப்பு ஏற்படும், இதனால் நாளடைவில் கண் புரைநோய் - Cataracts ஏற்படலாம்.

Lemon Twist Blogger Template is an extremely beautiful blogger template created by JackBook.Com based on Lemon Twist Wordpress themes by farfromfearless.com. You can edit this words into your own.